Wednesday, March 7, 2018

ஒரே இரவில் அதிக உயிரிழப்பை சந்தித்த கிழக்கு கெளத்தா மக்கள்

SHARE
சிரியாவின் கிழக்கு கெளத்தாவில் சிக்கியுள்ள மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் தாக்குதல் உக்கிரமடைந்ததை அடுத்து பாதி வழியில் திரும்பிச் சென்றுள்ளன. அரச படையின் போர் விமானங்கள் அந்த பிராந்தியத்தின் மீது குண்டு வீசுவதை தீவிரப்படுத்தியதை அடுத்து குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


ரஷ்யா அனுசரணையில் கிழக்கு கெளத்தாவில் அமுல்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தம் தோல்வி அடைந்த நிலையில் அங்கு அதிக உயிரிழப்பு நேர்ந்த தினங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் 30 நாள் யுத்த நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்த ஐ.நா பாதுகாப்பு சபை கொண்டு வந்த தீர்மானமும் தோல்வி அடைந்துள்ளது. டமஸ்கஸ் புறநகர் பகுதி மீது சிரிய அரச படை நேற்று செவ்வாய்கிழமை 16 ஆவது நாளாக தொடர்ச்சியாகஷெல் குண்டுகளை வீச ஆரம்பித்தது.

கடந்த திங்கட்கிழமை மாலை தொடக்கம் இங்கு இடம்பெற்று வரும் குண்டு மழையில் 70க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் ரஷ்யாவால் அமுல்படுத்தப்பட்ட ஒரு நாளைக்கு ஐந்து மணி நேர யுத்த நிறுத்தத்தை டமஸ்கஸின் கிழக்காக அமைந்திருக்கும் கிழக்கு கெளத்தா குடியிருப்பாளர்கள் சந்தேகத்துடனேயே பார்த்தனர்.

இந்த யுத்த நிறுத்தம் மூலம் கிழக்கு கெளத்தா மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு பாதுகாப்பு பாதை ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் காயமுற்றவர்கள் வெளியேறுவது மற்றும் உதவி வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டது. எனினும் அரச படை பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து தொடர்ச்சியாக வான் தாக்குதல் நடத்தி வருகிறது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சிரிய அரபு செம்பிறை சங்கம் மற்றும் ஐ.நாவின் உதவிப் பொருட்களை ஏற்றிய 46 டிரக் வண்டிகள் அரச சோதனைச் சாவடியை தாண்டி கடந்த திங்கட்கிழமை கிழக்கு கெளத்தாவுக்குள் நுழைந்த விரைவிலேயே இராணுவம் அங்கு வான் தாக்குதல்களை ஆரம்பித்தது. முற்றுகையில் இருக்கும் கிழக்கு கெளத்தா மக்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் பின் உதவி பொருட்கள் செல்லும் முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது.

எனினும் வாகனத்தில் இருந்த பல பொருட்களையும் சிரிய இராணுவம் பறிமுதல் செய்ததாக உதவிப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கிழக்கு கெளத்தா மீது அரச படை ஷெல் குண்டுகளை வீச ஆரம்பித்ததால் மிக அவசியம் தேவைப்படும் மருந்து மற்றும் உதவி பொருட்களை நிரப்பிய இந்த உதவி வாகனங்கள் திரும்பிச் செல்ல வேண்டி ஏற்பட்டதாக சிரிய சிவில் பாதுகாப்பு பேச்சாளர் ஒருவரான மஹ்மூத் அதாம் குறிப்பிட்டுள்ளார்.


SHARE

Author: verified_user

0 comments: